Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
நூல் அகம்

புன்னகை மின்னல்

சி.விநாயகமூர்த்தி ரூ.30/-

மரபுக்கவிதை புதுக்கவிதையாகி, புதுக்கவிதையானது குறுங்கவிதை, துளிப்பா என்கிற வடிவங்களைக் கடந்தும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கவிஞர் சி.விநாயகமூர்த்தி படைத்தளித்திருக்கும் துளிப்பாக்கள் படிப்போன் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. கவித்துவத்தை இழக்காமல் சொற்சுருக்கத்தோடு சமூக அக்கறையையும் வெளிப்படுத்துவது இவருக்கு எளிதாகக் கைகூடி இருக்கிறது. கட்டுகள் அவிழ்ந்ததும் / சுதந்திரமாய்ச் சுற்றுகிறது / பம்பரம் என்பதிலும் கிளியைக் கூண்டிலடைத்ததும் / பறந்து விட்டது / அதன் சுதந்திரம் என்ற துளிப்பாவிலும் விடுதலை வேட்கை தெறிக்கிறது. குடித்தது அவன் மட்டும் / ‘ஆட்டம்' கண்டது / குடும்பம் - இது சமூக யதார்த்தம். இப்படி ஏராளமான துளிப்பாக்கள்.

உதயகண்ணன், 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011. பேசி: 9444640986

பௌர்ணமியாகா பிறைநிலவுகள்

முனைவர் பெ.பகவத்கீதா ரூ.35/-

கல்லூயில் தமிழ் விரிவுரையாளர் பணி - கூடவே இலக்கிய தாகம். கவிதைகளையும் கதைகளையும் தொடர்ந்து படைத்துவரும் முனைவர் பெ.பகவத் கீதாவின் 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். ‘வாழ்க்கை அனுபவங்களை மொழியனுபவத்துடன் தரும் இலக்கியப் படைப்புகள் மனிதனின் மனஓய்விற்கு சுற்றுலாத்தலம்' என்கிற முன்னுரை இவருடையது. அணிந்துரைகளை வாங்கி ஆபரணமாகப் போட்டுக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவரது கதைகள் நம்முன் காணக்கிடைப்பது தொகுப்பின் தனிச்சிறப்பு. "மனிதன் மனஓய்விற்கான சுற்றுலாத்தலமே இலக்கியம்' எனக் கவிதைநயத்தோடு சொல்லி விட்டாரே தவிர, இந்த முதல் தொகுப்பில் உள்ள கதைகள் மனஓய்விற்கான நேரத்தையும் சிந்தனைக் களமாக மாற்ற முயல்கின்றன. போகிற போக்கில் முயற்சிகள் செழுமையுறும்போது தமிழ் இலக்கிய உலகுக்கு பொறுப்பான ஒரு பெண் படைப்பாளி கிடைத்திருப்பார். அந்த விடாமுயற்சியும் இவரிடம் தென்படவே செய்கிறது.

நல்நிலம் பதிப்பகம், ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ் பி. லிட், 7/3சி, மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17.

குறிப்புகள்

வெ.மதியரசன் ரூ.40/-

முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருந்து கொண்டே ஒரு கவிதைத் தொகுப்பினைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றி அடைந்திருக்கிறார் வெ.மதியரசன். படைப்பிற்கு முன்பாக சில குறிப்புக்களை தொகுத்துக் கொள்வது படைப்பாளிகளின் இயல்பு. அந்தக் குறிப்புகளையே குறுங்கவிதைகளாக்கியிருப்பது இவன் படைப்பார்வ வேகத்தினைக் காட்டுகிறது. இந்த சனநாயக நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடிப்புத் துறையினருக்கு விருதோ... விருது. ஆனால் உதிரம் சிந்த உழைத்தவர்க்கு வேட்டிதுண்டு - இலவச சேலை. இது எந்தவகை சனநாயகம் எனக் கேட்கிறது ஒரு குறிப்பு. உலகமயமாக்கத்தில் இந்தியாவின் தண்ணீர் பன்னாட்டு முதலாளியின் பாட்டிலுக்குள் அடைபட்டுக் கிடப்பதைச் சொல்கிறது இன்னொரு குறிப்பு. சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் படைப்பாளன் காதல்கவிதை எழுதலாமா என்ற ஒரு தயக்கம் இந்த இளம்கவிக்கு இருக்கிறது. காதல் இல்லையெனில் சமூகமே இல்லை என்பதைக் கவிதைகளில் பதிவுசெய்யும்போது இம்மயக்கம் காணாமல் போய்விடும்.

குகன் பதிப்பகம், 5, வி.கே.கே.பில்டிங், வடுவூர்-614 019. திருவாரூர் மாவட்டம்.

தமிழா உன் பெயர் தமிழா?

தொகுப்பு : பி.இரெ.அரசெழிலன் ரூ.4/-

மானமும் அறிவும்தான் மனிதரை அடையாளப்படுத்துபவை என்பது எந்தளவிற்கு உண்மையோ அதுபோலவே இனத்தின் அடையாளம் அவரவர் பெயரில் இருக்க வேண்டும் என்பதும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களிடையே இந்த இன அடையாள உணர்வு இல்லை என்பதாலேயே கண்ட கண்ட பெயர்களைத் தாங்கியபடி தமிழர்கள் வலம் வருகின்றனர். இந்த அவலமும் அறியாமையும் ஒழிவதற்கு நல்ல தமிழ்ப் பெயர்களை ஏராளமாக உள்ளடக்கியபடி இக்குறுநூல் வெளிவந்திருக்கிறது. பிறமொழிப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. பெயரினை எழுதும்போது தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும், பெயரைத் தமிழிலும் எழுதும் (T.கோவிந்தசாமி) அறியாமையினைக் கைவிட வேண்டும் என்று கோரும் தொகுப்பாசியர், பெயரின் முன்னெழுத்தில் அம்மா பெயரின் முதலெழுத்தினையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.

ஏமாற்றும் சாமியார்கள்

இளநம்பி ரூ.5/-

இந்தியாவில் மொத்தம் உள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையினைப் போல பலப்பல மடங்கு அதிகமாக உள்ளன இந்தியாவின் கோவில்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான சாமியார்கள். அதிலும் இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக நலிந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் நவீன சாமியார்களின் பட்டியலும் தொடர்ந்து நீண்டுகொண்டே இருக்கிறது. அத்தகைய நவீன சாமியார்களின் முகமூடிகளைக் கிழித்தெறிகிறது இக்குறுநூல். மக்கள்முன் துறவி வேடம்; திரைக்குப் பின்னோ கோடிகளில் புரளும் தொழிலதிபர் வாழ்வு முறை. இந்நிலையை நீடிக்கக் கையாளும் ஆயுதத்தின் பெயரே ஆன்மீகம். ஆன்மீகம் என்பதன் சாரம் எக்காலத்திலும் அறிவியல் காரணங்களை அறியாது இருப்பது என்பதே. இதில் ஆன்மீகம் வெற்றி பெற்றதாலேயே அதன் நிலைப்புத்தன்மை இறுகிக் கொண்டே செல்கிறது.

இந்த ஆன்மீகவாதிகளை எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதே இல்லை. ஏனென்றால் ஆளும் வர்க்கத்திற்கு அறியாமை மிகுந்த மக்களே தேவை என்பதைப் புரிந்துகொண்ட ஆன்மீகம் அதற்கேற்ப செயல்படுகிறது. கோடிகளில் புரளும் ஆளும் வர்க்கமும்-ஆன்மீக வர்த்தகமும் கைகோர்த்துக் கொண்டு ஒன்றுக்கொன்று ஆதரவாய் நிற்கிறது. அதனால் விளைந்த நமது பிரச்சனைகளுக்கு இந்த நவீனச் சாமியார்கள் தீர்வைச் சொல்ல மாட்டார்கள். அறிவியல்பூர்வமான சிந்தனை தான் தீர்வைச் சொல்லும் என்கிறது இவ்வெளியீடு.

இடிக்கப்பட வேண்டிய உத்தபுர சுவர்கள்

அருள்எழிலன் ரூ.3/-

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உத்தபுரம் ஒன்றியத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர், அச்சுவரைக் காப்பாற்றப் போராடிய சாதி இந்துக்கள் என்கிற செய்தி, சில மாதங்களுக்கு முன் அனைத்து ஊடகங்களிலும், சிலநாட்கள் தொடர்ந்து வலம்வந்து கொண்டிருந்தது. தீண்டாமைக் கொடுமையினைப் பின்னுக்குத் தள்ளியும் ஆதிக்க சாதியினரின் மன உறுதியினை முன்னிலைப்படுத்தியும் வழக்கம் போலவே தமது பணியினை முடித்துக்கொண்டன வெகுஜன ஊடகங்கள்.

தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் பல வழிகளிலும் இந்தியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அது உத்தபுரத்தில் அறுநூறு மீட்டர் நீளமுள்ள தீண்டாமைச் சுவராக வடிவம் கொண்டி ருக்கிறது. 1989ல் கட்டப்பட்ட இந்த சுவருக்குக் கடும் எதிர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தொடர் போராட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தி யதால் இந்த அவலம் வெகுமக்கள் கவனத்திற்கும் வந்தது.

சென்ற மே மாதத்தில் அந்த அறுநூறு மீட்டர் சுவல் நான்கு மீட்டர் அளவிற்கு இடிக்கப்பட்டு பொதுப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அரசும், காவல் துறையும் தமக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை உருப்பெறாத வரையில் தாழ்த்தப்பட்டோர் அப்பாதையைப் பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக் குறிதான். தீண்டாமைச் சுவரில் நான்கு மீட்டரை அப்புறப்படுத்தியாயிற்று. மீதமுள்ளதை இடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள்... எத்தனை போராட்டங்களோ... யார் கண்டது?

மேற்கண்ட மூன்று வெளியீடுகளும் கிடைக்குமிடம்: அறிவுச்சுடர் வெளியீடு, 7ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோவில், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி-620 013.

எந்திர நாய்க்குட்டியும், நிலாப்பையனும்

பொறிஞர் செங்கோ ரூ.50/-

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அறிவியல் புனைகதைகளின் தொகுப்பே இந்நூல். அறிவியல் வளர்ச்சிக்கு இதுபோன்ற கதைகளே முன்னோடிகளாக அமையும் என்பதால் தமிழ்ச்சமூக நலன் கருதி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வகை இலக்கியம் தமிழுலகிற்குப் புது வரவு. இத்தகைய அறிவியல் புனைகதைகளின் உருவாக்கம் தொழிற்புரட்சிக்குப் பின்னரே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுமே அறிவியல் கோட்பாடு, அறிவியல் கருவிகள் என்பதையே கதைக்கருவாகக் கொண்டிருக்கின்றன. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர்களாக ஆர்த்தர் கிளார்க் மற்றும் ஐசக் அசிமோ ஆகிய இருவரது கதைகளே மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதுவரவான அறிவியல் புனைகதை இலக்கியத்தின் வளர்ச்சி சமூக அறிவியல் கலை இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும்.

வெளியீடு : நியூ செஞ்சு புக் ஹவுஸ் பி. லிட், 41பி, சிட்கோ இண்டஸ்டியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-58. பேசி : 26251968


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com